Pages

Wednesday, November 27, 2013

இராசி மண்டலம் :

இராசி மண்டலம் :

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே (27Х4) 108 நட்சத்திர பாதங்கள் ஆகும். இந்த நூற்று எட்டு நட்சத்திர பாதங்களும் பன்னிரண்டு இராசிகளில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு இராசியிலும் (108/12=9) ஒன்பது நட்சத்திர பாதங்கள் அமைந்துள்ளன. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் சந்திரன் நிற்கும் நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரம் அமைந்துள்ள இராசியே ஜென்ம இராசியாகும். ஒரு நட்சத்திரத்தின் அளவு 13 பாகை 20 கலை ஒரு நட்சத்திர பாதத்தின் அளவு 03 பாகை 20 கலை ஆகும்.
மேற்கண்ட இராசி மண்டலத்திலுள்ள ஒவ்வொரு இராசியிலும் 2 ¼ நட்சத்திரம் வீதம் கடிகாரமுள் நகரும் இயக்க திசையில் பங்கிடப் பட்டுள்ளது என்பதை நன்குதெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
இந்த இராசி மண்டலத்திலுள்ள 12 இராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களின் வழியாகத்தான் 9 கிரகங்களும் தினமும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள இராசிகளில் அதனுள் குறிக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு நட்சத்திர பாதத்தில் தான் சுற்றி வர முடியும்.
காலற்ற, உடலற்ற மற்று தலையற்ற நட்சத்திரங்கள்
சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதம் மட்டும் ஒரு இராசியிலும் மற்ற இரண்டு, மூன்று நான்கு பாதங்கள் அடுத்த இராசியிலும் அமைந்திருப்பதால் இவை காலற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதம் மற்றும் இரண்டாம் பாதம் ஒரு இராசியிலும், மூன்றாம் பாதம் மற்றும் நான்காம் பாதம் அடுத்த இராசியிலும் அமைந்திருப்பதால் இவை உடலற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி ஆகியவற்றின் முதல் பாதம், இரண்டாம் பாதம், மற்றும் முன்றாம் பாதம் ஒரு இராசியிலும் நான்காம் பாதம் அடுத்த இராசியிலும் அமைந்திருப்பதால் இவை தலையற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment