Pages

Tuesday, November 26, 2013

கோமாதா எங்கள் குலமாதா

கோமாதா எங்கள் குலமாதா..!!

மாடுகளோடு மூர்க்கத்தனமாய் கத்தியோடும் கவசத்தோடும் சண்டையிட்டு கொல்லும் ஸ்பானிய காட்டுக் கலாச்சாரம் இருக்கிறது. மாடுகளைக் கதறக்கதற வெட்டி வீழ்த்தி, அதன் கொழுப்பை தின்று கொழுத்து திரியும், வெறிப் பிடித்த கூட்டத்தையும் நாம் உலகம் முழுதும் பார்த்து வருகிறோம். அந்த மாடுகளுக்காக ஒரு நாளை ஒதுக்கி, அதைக் குளிப்பாட்டி அழகுபடுத்தி, அதைத் தெய்வமாய் வழிபடும் ஒரு கலாச்சாரத்தை எங்கு பார்க்கலாம்..?!

பசுவைக் 'கோ' என்ற ஒற்றைச் சொல்லில் அரசன்/ இறைவன் தானத்தில் வைத்துப் போறறுவது செம்மொழியான எம் தமிழ். பசு என்பது நம் தாயைப் போன்ற தன்னிகரற்ற உயர்ந்த சீவன். தொன்றுதொட்டு தமிழர் நாகரீகம் பசுக்களையும், எருதையும், உழவையும் ஒட்டியே வளர்ந்திருக்கிறது. தமிழ்மறையான திருக்குறளில், ஆசான் திருவள்ளுவப் பெருமான் உழவு எனும் அதிகாரத்தை உழவிற்குத் தந்தமை தமிழர்கள் உழவை எவ்வாறு போற்றினர் என்பதற்குச் சான்று பகரும்.

பசுவின் பால் தாய்ப்பாலை மிகவும் ஒத்திருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். சைவ உணவு உண்பவர்களும் பாலை பருகுவதுண்டு. பசுவின் இரத்தம்தானே அதன் உடல் ரீதியான இரசாயன மாற்றங்களால் பாலாய் மாறுகிறது..?! அதன் பாலை அது நமக்கு வேண்டி விரும்பியா தருகிறது..?! அதன் கன்றைக் காட்டி, திருடியல்லவா எடுக்கிறோம். அதற்கு பரிகாரமாய் பசுக்களை போற்றி வழிபடுவதன் மூலம் அப்பாவச் செயலுக்கு நாம் பரிகாரம் செய்துக் கொள்கிறோம். ஒரு பொருளை திருடியதற்காக அபராதம் செலுத்துகிறோம்.

சிலர் ஒரு கேள்வி கேட்கலாம்..?! அது என்ன மாட்டுக்கு மட்டும் தனி மரியாதை? மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கு மட்டுமல்ல கால்நடைகள், பறவைகள் என்று நம்மை சுற்றி உள்ள உயிரனங்களுக்கும் தான். நம் கலாசாரம் அனைத்தையும் தழுவிக் கொள்வது. நான் மனிதன், நான் மட்டுமே நுட்பமான அறிவுள்ளவன், ஆகையால் அனைத்தையும் அடிமைப்படுத்தி அரசாளுவேன் என்று நம் முன்னோர்கள் நினைத்ததில்லை.

மாறாக‌ நாம் வாழ்வது ஒருவரை ஒருவர் சார்ந்த உலகம். விலங்குகளும் இயற்கையும் நம் வாழ்வில் இன்றியமையாதவை என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.

நாம் மற்ற உயிர்களையும் மதித்து விழா எடுக்கும் கோப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) என்பது தமிழர் நாம் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் முதிர்ச்சி அடைந்த ஒரு சமுதாயம் என்பதையும், தன் சுற்றுப்புறத்தோடு ஒன்றினைந்து வாழ்ந்த, வாழ வழிகாட்டிய இனம் என்பதையும் பெருமையுடன் குறித்து நிற்கின்றது. இது தங்கள் தகுதியை உயர்த்தி பிடிப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவிக்கும் "க்ரீன் டே" போன்ற பெருமை சார்ந்த தின‌ம் இல்லை.

ஒரு பாமரனும் தன் சுற்றுப்புறத்தை மதித்தும் போற்றியும் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட தினம் தான் இந்த மாட்டுப் பொங்கல். இன்று சகல சீவராசிகளும் நன்றி செலுத்தும் நன்னாள். இந்நாளில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துவோம்.


 

No comments:

Post a Comment